Mangayar Malar
Mar 2010


அறிவிப்புகள்
கருத்துகள்
உங்கள் பகுதி
சமையல்
அழகு
மருத்துவம்
ஆன்மிகம்
திருமண மலர்





Designed & hosted by

 

கிருஷ்ணா வழக்கம்போல் மாலை கோயிலுக்குச் சென்று சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்து விட்டு நவக்கிரக சன்னதிக்கு வந்தான். சன்னதியின் படிகளில் ஏதோ யோசனையுடன் இலக்கில்லாமல் வெறித்துப் பார்த்தபடி வயதான பெண்மணி அமர்ந்திருந்தார். நவக்கிரக சன்னதியை ஒன்பது முறை வலம் வந்தவன், அந்த அம்மாவின் அருகாமையில் வந்து உட்கார்ந் தான்.

அங்கு வந்த சாம்பு குருக்கள், "என்ன கிருஷ்ணா பார்க்கிறே? அந்த அம்மா கோயில் திறக்கும்போது வந்தவங்க. இப்படியேத் தான் உட்கார்ந்திருக்காங்க. பாவம்! மனசில் என்ன வேத னையோ?" என்று கூறியவாறு நகர்ந்தார்.

இதைக் கேட்டவுடன் கிருஷ்ணாவுக்கு அவரிடம் பேச வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. மெதுவாக அவர்கள் பக்கம் திரும்பி, "அம்மா, அம்மா" என்று கூப்பிட்டான். பதில் வராமல் போகவே சற்றுக் குரலை உயர்த்தித் திரும்பவும் "அம்மா" என்றான். இப்போது அவரிடம் சிறிது அசைவு ஏற்பட்டது. மெள்ள அவனைத் திரும்பிப் பார்த்தார்.

"அம்மா ரொம்ப நேரமாயிடுச்சே! வீட்டுக்குப் போக வேணாமா?" என்று கேட்டான். அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏனோ கிருஷ்ணாவுக்கு அவர்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல மனமில்லை. சற்று நேரம் கழித்து "உங்க வீடு எங்கேம்மா இருக்கு? நான் உங்களை அழைச்சுக் கிட்டுப் போகட்டுமா?" என்று கேட்டான். அதற்கும் பதில் வராமல் போகவே, ஒரு முடிவுக்கு வந்தவனாக அவர்களது கையைப் பற்றிய கிருஷ்ணா, "வாங்கம்மா... நம்ம வீட்டுக்குப் போலாம்" என்றான். இப்போது சற்றுத் தயக்கத்துடன் எழுந்த அந்த அம்மாள், கிருஷ்ணாவின் கையைப் பிடித்தபடி நடக்க ஆரம்பித்தார்.

வீட்டை அடைந் ததும் "உள்ளே வாங் கம்மா" என்றான். தயக்கத்துடன் உள்ளே வந்த வரைப் பார்த்த யாமினி, கேள்விக் குறி யுடன் கணவனைப் பார்த்தாள். உள்ளே அழைத்துப் போகு மாறு கண்களாலேயே பதில் கூறினான் அவன். "வாங்க... வாங்க" என்று கூறி அவர்களை அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைத்தாள். அந்த அம்மா எந்தச் சலனமும் இன்றி உட்கார்ந்திருந்தார்.

இரவு உணவுக்கான நேரம் நெருங்கி விட்டது. கிருஷ்ணா `டீ.வி'யை ஆன் செய்து விட்டு யாமினியிடம் சமையலறைக்குச் சென்று நடந்த நிகழ்ச்சிகளை விவரித் தான். "சாப்பாட்டு வேலையை முதலில் முடிப்போம். பிறகு பேசுவோம்" என்றாள் யாமினி.

"சாப்பிட வாங் கம்மா" என்று கிருஷ்ணா பலமுறை அழைத்தும், காதில் ஏதும் கேட்காத மாதிரியே அமர்ந்திருந் தார். அடுத்த அறையில் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்த ராகுல், அம்மாவின் "சாப்பிட வா" என்ற குரலுக்கு ஓடி வந்தான். ராகுலை அருகில் வரச் சொன்ன யாமினி, "பாட்டியை சாப்பிடக் கூப்பிடுடா" என்றாள்.

"யாரும்மா அவங்க?" என்று கேட்ட ராகுலிடம் "அவங்க உனக்குப் பாட்டி மாதிரி நம்ம வீட்டுல தங்கிச் செல்ல வந்திருக்காங்க" என்றாள். அருகில் சென்று அவர்கள் கையைப் பற்றிய ராகுல், "வாங்க பாட்டி, சாப்பிட வாங்க' என்று இடைவிடாது அழைத்ததும் அவனை ஏறிட்டுப் பார்த்தவரின் முகத்தில் சிறிது சலனம் ஏற்பட்டது. பிறகு ராகுலை உற்று நோக்கியவர் மென்மையான ஒரு பூரிப்பை வெளிக்காட்டி, அவனை அருகில் அமர வைத்து முத்தமிட்டார். "சாப்பிடுங்க பாட்டி" என்ற ராகுல், தன்னுடைய சின்ன கைகளால் அவர் களுக்கு உணவை ஊட்ட ஆரம்பித்ததும், தன்னிச்சையாக அவரும் அவனுக்கு ஊட்டத் தொடங்கினார்.

ராகுலின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. `பாட்டி என்னோடுதான் பேசணும், என் பக்கத்தில்தான் படுத்துக் கணும்' என்று அறிவித்துவிட்டு, "கதை சொல்லுப் பாட்டி" என்று நச்சரிக்க ஆரம் பித்தான். இப்படியே இரண்டு, மூன்று நாட்கள் கடந்தன.

அந்த அம்மாவின் செயல்பாடுகளில் சிறிது சிறிதாக மாற்றங்கள் தெரிய ஆரம்பித் தன. இயல்பான பேச்சும், சிரிப்புமாக நடமாடத் தொடங்கியவுடன் தான் கிருஷ் ணாவும் யாமினியும் மெதுவே அவரது இருப்பிடம், சொந்தங்கள் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது அவரது பதில். மேலே குறிப்பிட்ட விவரங்கள் எதுவும் அவரது நினைவில் இல்லை. இப் போதைக்கு அவர் அறிந்த மூன்று நபர்கள், இந்த வீட்டில் இருப்பவர்கள்தாம். அவர் களது பெயர்கள் மட்டுமே தமது நினைவில் பதிந்துள்ளதாகக் கூறினார்.

நாட்கள் நகர நகர ராகுலுக்கு பாட்டி யிடம் பாசப் பிணைப்பு அதிகரித்தது. பாட்டி என்ற உறவு அவன் நினைவு தெரிந்தபின் அறியாத உறவு. வகுப்பில் பிற நண்பர்கள், தாத்தா பாட்டி அரவ ணைப்பில் வளர்ந்து வருவதும் சிலர் விடுமுறை நாட்களை, தாத்தா பாட்டி யுடன் சேர்ந்துக் கொண்டாடுவதும் அவனுள் ஏக்கத்தையே உருவாக்கியிருந் தன. அவற்றையெல்லாம் ஈடு செய்யும் வகையில் அவனுக்கு அன்பே உருவான ஒரு பாட்டி கிடைத்துவிட்டார்.

வகுப்பறையில் மற்ற குழந்தைகள் நடுவில் பாட்டியின் பெருமைகளைப் பேசி மகிழ ராகுலுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நாள் அவன் பேசுவதைக் கேட்டு வருத்தத்துடன் அமர்ந்திருந்த அவன் நண்பன் அர்ஜுனிடம், "ஏண்டா உன் பாட்டியைப் பற்றி நீ எதுவுமே பேச றதில்லை?" என்று கேட்டான் ராகுல். கண் களில் கண்ணீர் தளும்பியபடியே அர்ஜுன் கூறிய விஷயம், ராகுலை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"ஒரு நாள் ஸ்கூலிலிருந்து நான் வீட்டுக் குப் போனபோது அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. `எங்கம்மா எங்கே போனாங்களோ?'னு அப்பா, புலம்பிக்கிட்டேயிருந்தார். அம்மா அழுதுகிட்டும், சத்தம் போட்டுக்கிட்டும் இருந்தாங்க. பாட்டி திரும்பி வரவே யில்லை" என்றார்.

ராகுல் வீடு திரும்பியதும் பாட்டி யைப் பிரிந்து தவிக்கும் அர்ஜுனைப் பற்றி கூறத் தொடங்கினான். அதனைக் கேட்க கேட்க யாமினிக்குப் புதிருக்கு விடை கிடைத்துவிட்டதுபோல் தோன்றியது. கிருஷ்ணாவுடன் கலந்து பேசி அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். "பாட்டி காணாமல் போய்விட்டதாகக் கூறும் அர்ஜுனையும் கடந்த காலத்தை ஞாபகத்துக்கு கொண்டு வர முடியாமல் தடுமாறும் பாட்டியையும் சந்திக்க வெச்சா, ஒரு தீர்வு கிடைக்குங்க!" என்று நம்பிக்கையோடு சொன்னாள்.

மறுநாள் காலை ராகுல், பள்ளிக்குக் கிளம்பும்போது "சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்சதும் ஆட்டோ ரிக்ஷாவுல திரும்ப வேணாம். நானும் பாட்டியும் வந்து கூட்டிக்கிட்டு வர்றோம்!"னு சொன்னதும் அவனுக்கு ஒரே சந்தோஷம்.

"பாட்டி, என் ஸ்கூலைப் பார்க்க கண்டிப்பாக வந்து டுங்க" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.

"அர்ஜுனையும் உன்னோடு வெளியே கூட்டிக் கொண்டு வா. அவனுக்கும் பாட்டி யைக் காட்டலாம்" என்று யாமினி சொல்லி வைத்தாள்.

சாயங்காலம் வீடு திரும்பும் பறவைகள் போல ராகுலும் அர்ஜுனும் மைதானத் தில் ஓடோடி வந்து நிற் கவும், யாமினியும் பாட்டியும் உள்ளே நுழைந்தனர். ஓடி வந்து பாட்டியின் கையைப் பற்றிக் கொண்ட ராகுல், "அர்ஜுன், வா வா என் பாட்டியைப் பார்த் தியா?" என்று அழைத் தான். அருகில் வந்து நின்ற அர்ஜுன் முகத் தையே உற்றுப் பார்த் தாள் யாமினி. "பாட்டியைப் பார்த்தியா யார் தெரிகிறதா?" என்று கேட்டாள். "உம், ராகுல் பாட்டிதானே, சொல்லியிருக்கான். ரொம்ப நல்லவங்க. அவனோடு விளை யாடுவாங்க, டீ.வி பார்ப்பாங்க" என்று தொடர்ந்து பேசிய அர்ஜுனை ஏமாற்றத் துடன் பார்த்தாள் யாமினி. புதிர் விடுபட் டதா என்று அறியும் ஆவலுடன் வீடு திரும்பிய கிருஷ்ணாவுக்கும் ஏமாற்றம் தான்!

குடும்பத்தில் ஒருவராகத் தன்னை இணைத்துக் கொண்ட பாட்டியைத் தங் களுடனே தங்க வைத்துக் கொள்வதில் யாமினிக்கும் மகிழ்ச்சிதான் என்றாலும், ராகுலுக்கும் பாட்டிக்கும் இடையே நெருக் கம் அதிகமாகிய பிறகு அவரது உறவினர் கள் வந்து அழைத்துச் செல்லும் சந்தர்ப்பம் நேர்ந்தால், அவன் அதனைத் தாங்குவானா என்ற சிந்தனையும் எழுந்தது. இப்போதி ருந்தே அவனைத் தயார்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் யாமினி.

ஒருநாள் "உன் பாட்டி திரும்பவும் எப்போது பள்ளிக்கு வருவாங்க" என்று ராகுலைக் கேட்டான் அர்ஜுன். "ஏண்டா, உன் பாட்டி திரும்பி வரலையா? அவங் களை நீங்க தேடலையா?" என்று ராகுல் திருப்பிக் கேட்டதற்கு, அர்ஜுன் கூறிய பதில், அவர்கள் இருவருக்கு மட்டுமே இனிமேல் தெரிந்திருக்க வேண்டிய பிள்ளை மொழி.

"என் பாட்டிதான் கிடைச்சுட்டாங் களே... அவங்களை என்னைத் தவிர வேறு யாரும் தேடமாட்டாங்க. தேடவும் வேண் டாம். உங்க வீட்டில் இருக்கும் எங்கப் பாட்டி, உங்கக் கூடவே மகிழ்ச்சியா இருக் கட்டும். அப்போதான் எனக்குத் தோணும் போதெல்லாம் அவங்களைப் பார்க்க முடியும்." அர்ஜுன் கூறிய வாசகங்கள், ராகுலை அதிர்ச்சி அடையச் செய்தாலும் மனத்தில் உறுதியை ஏற்படுத்தின.

அர்ஜுன் தனது பாட்டியைச் சந்திக்க வைக்கும் நோக்கில் "அம்மா என்னை வீட்டுக்குக் கூட்டிச் செல்ல பாட்டி ஸ்கூலுக்கு வரணும்" என்று அவ்வப் போது ராகுல் கேட்பது வழக்கமாகி விட் டது.

ஒரு நாள் ராகுலிடம் "பாட்டியை அடிக்கடி தொந்தரவு செய்யக் கூடாது. அவரது மகனும் பேரனும் சீக்கிரமே பாட்டியை அழைத்துச் செல்ல வரப் போறாங்க" என்றாள் யாமினி. "இல் லம்மா அவங்க யாரும் வரமாட்டாங்க" என்று ராகுல் கூறிய பதில், அவன் தன்னைத்தானே தேற்றிக் கொள்வதற் கானது என்றுதான் யாமினி நினைத்தாளே தவிர, அந்த வாசகங்களின் பின்னே ஒளிந்திருக்கும் உண்மைகள் என்றும் தெரியப்போவதில்லை.

 

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர் வாங்குங்கள்.

 
No comments posted.

 

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2010, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
  Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 
Fax: 91-44-
2225 1021