
அந்த வீட்டின் எசமானி, இதோ, தாயம்மாவின் மூங்கில் பிளாச்சு
கால்களுக்கிடையே துயிலும் சிசுவின் தாய் சியாமளா, பெரிதாய் அழுதுக்
கொண்டிருந்தாள்.
"உங்களுக்கு என் மேல உண்மையான அன்பிருந்தா,
என்னைக் கேட்காம, இப்படியொரு காரியம் செய்வீங்களா!"
"சியாமா...
இது, இந்த அளவுக்கு உன்னைப் பாதிக்கும்னு நான் நினைக்கவே இல்லேடா.
அப்பாவுக்கு ஓர் `ஆஞ்சியோ' அவசரமாப் பண்ணனும்னு அண்ணா சொன்னான். அவன்
இருக்கறது சிட்டிக்கு ரொம்பத் தள்ளி... அதனாலேதான்..."
"அதெல்லாம் பிளான் பண்ணித்தானே ஊருக்கு வெளியிலே ஃபிளாட்
வாங்கியிருக்கார் உங்க அண்ணா... நாமதான் அசடு. இந்தப் பக்கம் அப்பல்லோ,
அந்தப் பக்கம் அகர்வால், பத்தே நிமிஷத்துல லஸ் கார்னர், முப்பது ரூபா
கொடுத்தா மயிலாப்பூர் கபாலி கோயில், மியூஸிக் அகாடமி, சரவண பவன்னு
பார்த்துப் பார்த்து வாங்கினோம். இப்ப என்ன ஆச்சு? என்னை இங்கே வீட்டுல
உட்கார வச்சிட்டு, நீங்க டூர் போயிடறீங்க. மாயவரம் அத்தை, திருச்சி
சித்தப்பா, கோயமுத்தூர் அக்கான்னு மாசத்துக்கு இருபது நாள் படை படையா
வந்து இறங்கி... என்னாலே முடியலேப்பா... நான் கல்கத்தாவுக்குக்
கிளம்பறேன்."
தாயம்மா, இடுப்பிலிருந்த சுருக்குப் பையைத் துழாவி
எடுத்து, ஒரு துண்டு புகையிலையைக் கிள்ளி, வாயில் அதக்கிக் கொண்டாள்.
அவளையும் மீறி, மனசு, ஆழப் புதைந்துக் கிடக்கும் நினைவுகளை, பள்ளம்
தோண்டி எடுத்தது.